தமிழ்நாட்டில் விருதுநகர் பகுதிகளில் நடக்கும் கொடூரமான ஒரு நிகழ்வு தான் இந்த தலைக்கூத்தல்.
வயோதிகத்தால் படுத்த படுக்கையாகி விடும் முதியோரை பார்த்துக்கொள்ள முடியாத சூழலில், அதிகமான இளநீரை கொடுத்து எண்ணெய் தேய்த்து தலைக்கு குளிர்ந்த நீரால் ஊற்றி விட, ஜன்னி வந்து அவர்கள் உயிர் பிரிந்து விடும்.
இந்த நிகழ்வை நேசமும் நெகிழ்வுமான அப்பா-மகன் பாசப்பிணைப்பில் ஒரு தேர்ந்த படைப்பாக திரைக்குத் தந்து இருக்கிறார் இயக்குனர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன்.
மகனுடன் சேர்ந்து கட்டிடம் கட்டும் போது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்த அப்பா அதன்பிறகு அசைவின்றி படுத்த படுக்கையாகி விடுகிறார்.
அதன்பிறகு தந்தையை பராமரிப்பதிலேயே மகன் சமுத்திரக்கனிக்கு நேரம் போய் விட, வருமானம் தரக்கூடிய தன் கட்டுமானப் பணியை விட்டுவிட்டு இரவு நேர வாட்ச்மேன் வேலையில் சேரும் அளவுக்கு எல்லாமே மாறிப்போகிறது.
அந்த வருமானம் போதாத நிலையில் அவர் மனைவி வசுந்தராவும் தீப்பெட்டி தொழிற்சாலைக்கு வேலைக்கு போய் சம்பாதிக்க வேண்டிய கட்டாயம்.

இந்த தம்பதிகளுக்கு பள்ளியில் படித்து வரும் ஒரே மகள். தாத்தா என்றால் இவளுக்கும் அப்படி ஒரு பிரியம்.

இந்நிலையில் தந்தையின் மருத்துவச் செலவுக்காக கடன் வாங்கும் சமுத்திரக்கனிக்கு அதை அடைக்க முடியாமல் வீடு பறி போகும் நிலை. இது விஷயம் மனைவிக்கு தெரிய வர, இந்நிலையில் கடனை அடைத்து வீட்டு பத்திரத்தை மீட்கும் மனைவியின் குடும்பம், இ்பபோது பெரியவரின் உயிரை தலைக்கூத்தல் மூலம் முடிவுக்கு கொண்டு வர வற்புறுத்துகிறார்கள். அப்பாவுக்கே செலவழிச்சு கடனாளியாகும் நிலை இனியும் வேணாம் என்கிற வேண்டுகோளும் மனைவியின் குடும்பத்தால் வைக்கப்பட…

அந்த பாவத்தை மகன் சமுத்திரக்கனி செய்தாரா? என்பது இதயம் கனக்கும் மீதிக்கதை.

சமுத்திரக்கனி நடிப்பில் பழனி என்ற இந்த உயிர்ப்பு மிக்க இந்த கேரக்டர் தொடக்க முதலே பார்வையாளனின் நெஞ்சுக்குள் ஏறி சிம்மாசனமிட்டு விடுகிறது. தந்தை மீதான பாசத்தால் கோமா நிலையிலிருக்கும் அந்த நேரத்திலும் சர்வ சாதாரணமாக தந்தையுடன் நாட்டு நடப்பு வரை உரையாடிக்கொண்டே குளிப்பாட்டுவது, உணவு கொடுப்பது என்று வரும் காட்சிகளில் எல்லாம் சமுத்திரக்கனியின் நடிப்புக் கொடி ரொம்பவே உயரம்.. தந்தையை தலைக்கூத்தல் மூலம் கொன்று விட மனமில்லாமல் தவிப்பதும், அதே நேரத்தில் மனைவி கூட தன் அருகில் வர மறுக்கும் சூழலை இயல்பாக கடந்து போவதிலும், பேருந்தில் மகள் கேள்விக்கு பதில் சொல்ல முடியாத அப்பாவாக திணறுவதுமாய் அந்த கிராமத்து பழனி கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார்.
சமுத்திரக்கனியின் மனைவியாக வரும் வசுந்தரா இன்னொரு நடிப்பு பொக்கிஷம். கணவனின் கவனம் தன் பக்கம் வரவில்லை என்று தெரிந்து கொண்டு கிடைத்த இடத்தில் எல்லாம் வார்த்தைகளால் திருப்பி அடிக்கும் நடிப்பில் கிராமத்து இயலாமை மனைவியை கண்முன் நிறுத்துகிறார். கோபத்தில் கணவனுக்கு வைத்திருந்த சோற்றை நாய்க்குப் போட்டு விட்ட நேரத்திலும் மனம் கேளாமல் அண்ணனுக்கு போன் போட்டு சாப்பாடு வாங்கி வரச்செய்யும் இடத்தில் மனைவி என்னும் மாதா தான் கண்ணில் தெரிகிறாள்.

சமுத்திரக்கனியின் மகளாக அந்த குட்டிப் பாப்பா தாத்தா மீது காட்டும் பரிவிலும் பாசத்திலும் நடிப்பில் அப்பாவுக்கேற்ற பிள்ளை. பரீட்சை பேப்பரில் அப்பாவிடம்கையெழுத்துவாங்க வரும் இடத்திலுஅந்த அப்பா-மகள் அன்பு அத்தனை அன்யோன்யம்.

கோமாவிலேயே வாழ்ந்திருக்கும் அந்த அப்பா கேரக்டரில் கலைச்செல்வன் பேசாமலே பேசும் அந்த நடிப்பில் மாயாஜாலம் நிகழ்த்துகிறார்.
இந்தக் கதையினூடே அவ்வப்போது வந்து போகும் கதிர்-கதானந்தியின் காதல் காட்சிகள் கவிதைச்சரம். போகப்போக கதிர் யார் என்பதை நாமே புரிந்து கொள்ள வைத்திருக்கும் இயக்கத்தில் இயக்குனர் ஜெயித்திருக்கிறார்.அந்த காதல்கண்ணழகி (கதானந்தி) இன்னமும் கண்ணுக்குள்.
சமுத்திரக்கனியின் நண்பனாக ஆடுகளம் முருகதாஸ், இன்னொரு ஜீவனுள்ள கதாபாத்திரம்.
வசுந்தராவின் அப்பா, அண்ணன் கேரக்டர்களில் இயல்பு மனிதர்கள் நம்மை கடந்து போகிறார்கள். குறி சொல்லும் திருநங்கை கேரக்டரில் வையாபுரி இன்னொரு ஆச்சரியம்.
மார்ட்டின் துன்ராஜின் கேமரா கிராமத்தை அதன் இயல்போடு காட்டி வியக்க வைக்க, கண்ணன் நாராயணனின் இசையும் அதில் பிரதானம்.
விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கையை அதன் இயல்பு மாறாமல் காட்சிப்படுத்தியிருக்கும் இந்த தலைக்கூத்தல், சமூக கட்டமைப்பில் விழுந்த கீறல். இந்த படம் மூலமாக அதற்கு ஒரு விடிவு வந்தால் அதுவே இந்த படைப்பின் நோக்கம் நிறைவேறும். செய்வார்களா?

விருது கொடுத்த உச்சி முகர வேண்டிய படைப்பு.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2023/02/Thalaikoothal-movie-review3-1024x538.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2023/02/Thalaikoothal-movie-review3-150x150.jpgrcinemaதிரை விமர்சனம்தமிழ்நாட்டில் விருதுநகர் பகுதிகளில் நடக்கும் கொடூரமான ஒரு நிகழ்வு தான் இந்த தலைக்கூத்தல். வயோதிகத்தால் படுத்த படுக்கையாகி விடும் முதியோரை பார்த்துக்கொள்ள முடியாத சூழலில், அதிகமான இளநீரை கொடுத்து எண்ணெய் தேய்த்து தலைக்கு குளிர்ந்த நீரால் ஊற்றி விட, ஜன்னி வந்து அவர்கள் உயிர் பிரிந்து விடும். இந்த நிகழ்வை நேசமும் நெகிழ்வுமான அப்பா-மகன் பாசப்பிணைப்பில் ஒரு தேர்ந்த படைப்பாக திரைக்குத் தந்து இருக்கிறார் இயக்குனர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன். மகனுடன் சேர்ந்து கட்டிடம்...