காலங்களில் அவள் வசந்தம் பட விமர்சனம்
சினிமாவில் வரும் காதல் போல தன் காதலும் ஆழமானதாக இருக்க வேண்டும் என்று எண்ணும் நாயகன், நிஜத்தில் அதை சாத்தியமாக்க முயல… அதில்ஒரு பெண்ணின் காதல் கிட்டத்தில் வந்து இதயத்துடிப்போடு இணைய…இதே மாதிரியான ஒரு சூழலில் தந்தையின் நண்பர் குடும்பம் தங்கள் மகள் அஞ்சலிநாயருடன் வீட்டுக்கு வர, நாயகனை பார்த்த மாத்திரத்தில் அஞ்சலி நாயருக்கு காதல் வந்து விட, அதேவேகத்தில் திருமணமும் நடந்து விட…
திருமணத்திற்கு பின்பு கணவனின் பழைய காதல் பிளாஷ்பேக் தெரிய வர, இருவருக்குள்ளும் பிரச்சினை. அதுவே தொடர்ந்து விவாகரத்து வரை போக…
முடிவு என்னாகிறது? தம்பதிகள் இணைந்தார்களா? அல்லது பிரிந்தார்களா? என்பது காதலுடன் கூடிய கிளைமாக்ஸ்.
நாயகன் கௌசிக் புதுமுகமாக தெரியவில்லை. அவரது காதல் லட்சியம் தொடர்பான ஆரம்ப காட்சிகளில் அரங்கை கலகலப்பாக்குகிறார். மனைவியுடனான பிரிவில் வெளிப்படும் அந்த சோகம் இதுவரை புதுமுகங்கள் எட்டிப் பிடிக்காத சிகரம்.
காதல் மனைவியாகி பிரச்சினைக்குள்ளாகும் அஞ்சலி நாயரின் கண்களில் நவரசமும் பொங்கி வழிகிறது. காதல், சோகம், பிடிவாதம், ஆத்திரம் என பல்வேறு உணர்வுகள் கண்கள் வழியாக தெறிக்கும் அழகே அழகு.
இரண்டாம் நாயகியாக வரும் ஹிரோஷினி சில காட்சிகளில் வந்தாலும் மனதில் நின்று போகிறார். உண்மைக் காதல் என்றால் என்ன என்பதை இவர் கேரக்டர் வெளிப்படுத்துவது அழகு.
ஹரியின் பின்னணி இசை இந்த காதல் படத்தின் நிஜமான காதலாகி இருக்கிறது. கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவும், லியோ ஜான் பால் ஒளிப்பதிவும் இதம்.
ராகவ் மிர்தத் இயக்கி இருக்கிறார். கேண்டில் லைட் டின்னர், கிரீட்டிங் கார்ட் என 90’ஸ் 2கே கிட்ஸ்களின் காதலை கண்முன் நிறுத்தியுள்ளார். இந்த காலத்து காதல் எப்படி இருக்க வேண்டும் என்பதை காட்சிப்படுத்திய விதத்திலும் காதலின் உண்மை சாட்சியாகி இருக்கிறார்.
இந்த காதலின் வசந்தம்… காலங்கள் உள்ள வரையிலும்….