யோகிபாபு மற்றும் நடன இயக்குநர் தினேஷ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் படம் ‘லோக்கல் சரக்கு’. நாயகியாக உபாசனா நடித்திருக்கிறார். டிஸ்கவர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை எஸ்.பி.ராஜ்குமார் எழுதி இயக்கியுள்ளார். வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ் இசையமைத்திருப்பதோடு படத்தை தயாரித்தும் உள்ளார்.
படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று காலை சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது. இதில் நடிகர் ராதாரவி, தயாரிப்பாளர் கே.ராஜன், பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி, பாடலாசிரியர் சினேகன், நடிகைகள் இனியா, உபாசனா, நடிகர் சென்ராயன், இயக்குநர்கள் கவிதா பாரதி, பொன்ராம், கில்டு தலைவர் ஜாகுவார் தங்கம், தயாரிப்பாளர் கருணாகரன், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழு உறுப்பினர் விஜயமுரளி, இசைக்கலைஞர்கள் சங்க தலைவர் தீனா உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.

விழாவில் சிறப்பு விருந்தினர்களை வரவேற்று பேசிய இசையமைப்பாளரும் தயாரிப்பாளருமான வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ், “நான் இசையமைப்பாளராக வேண்டும் என்பது என் அம்மாவின் கனவு. இன்று அவருடைய கனவு நிறைவேறி விட்டது. ஆனால், அதை பார்க்க அவர் உயிருடன் இல்லை. இருந்தாலும் கடவுளாக இருந்து என்னை அவர் ஆசீர்வாதம் செய்து கொண்டு தான் இருக்கிறார். இந்த மேடையை நான் பலருக்கு நன்றி தெரிவிக்க பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முதலில் என் குரு சங்கர் கணேஷ் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பல ஜாம்பவான்களை உருவாக்கிய அவர் என்னையும் ஒரு இசையமைப்பாளராக உருவாக்கியுள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு நான் அழைத்தவுடன் வந்த அனைத்து பிரபலங்களுக்கும் நன்றி. குறிப்பாக ராதாரவி சார், பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி, இசைக் கலைஞர்கள் சங்க தலைவர் தீனா என அனைவருக்கும் மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
இசைக் கலைஞர்கள் சங்கத்தலைவர் தீனா பேசுகையில், “இங்கு பேசும்போது பல இசையமைப்பாளர்களை சங்கர் கணேஷ் சார் அறிமுகம் செய்து வைத்ததாக சொன்னார்கள், என்னையும் அவர் தான் அறிமுகம் செய்து வைத்தார். என்னை வீணை கலைஞராக சங்கர் கணேஷ் சார் தான் அறிமுகப்படுத்தினார். அந்த வகையில் அவர் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி இன்று ஒரு தயாரிப்பாளராகவும் உயர்ந்திருக்கும் ராஜேஷை பார்க்கும் போது எனக்கு பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. ராஜேஷ் ஒரு இசையமைப்பாளர் மட்டும் இன்றி நல்ல மனம் படைத்தவர், கொரோனா காலத்தில் இசைக் கலைஞர்கள் சங்கத்தில் 500 பேருக்கு தலா 25 கிலோ அரிசி கொடுத்தார். அதுமட்டுமின்றி பல ஏழைகளுக்கு இலவசமாக பல நாட்கள் உணவு வழங்கினார். இதுபோன்ற பல உதவிகளை அவர் கொரோனா காலத்தில் செய்து வந்தார். அவருடைய இந்த நல்ல மனதுக்காக இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும்” என்றார்.
நடிகர் ராதாரவி பேசுகையில், “இசையமைப்பாளர் ராஜேஷ் இந்த படத்தை தயாரிக்கவும் செய்திருக்கிறார். அவர் பல வேலைகளை இழுத்துப் போட்டு செய்து வருகிறார். டி.ராஜேந்தரும் இப்படி தான் பல வேலைகள் செய்வார். அந்த வகையில் டி.ராஜேந்தரை போல் ராஜேஷும் சகலகலா வல்லவனாக இருக்கிறார். என்னிடம் படத்தின் தலைப்பை சொன்னபோதே இந்த படம் வெற்றி பெறும் என்று நம்பிக்கை வந்தது. லோக்கல் சரக்கு என்பது அனைவருக்கும் பிடித்தமான தலைப்பு. காரணம், லோக்கல் சரக்குக்கு அவ்வளவு பவர் இருக்கிறது. இந்த சரக்கு இல்லை என்றால் எந்த அரசையும் நடத்த முடியாது. படத்தின் பாடல்கள் மிக நன்றாக இருந்தது. வார்த்தைகள் புரிந்தது. எனவே ராஜேஷ் இசையமைப்பாளராக மட்டும் இன்றி ஒரு தயாரிப்பாளராகவும் பெரிய வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.
பாடலாசிரியர் சினேகன் பேசுகையில், “இந்த படத்தில் நான் பாடல்கள் எழுதவில்லை. யார் எழுதியிருக்கிறார்கள் என்றும் தெரியவில்லை. ஆனால், ராஜேஷ் என்னை அழைத்தவுடன் வந்து விட்டேன். பாடல்களை பார்த்தேன் மிக நன்றாக இருந்தது. குறிப்பாக பாடல்களின் வரிகள் புரியும்படி ராஜேஷ் இசையமைத்திருக்கிறார். இப்போது சில இசையமைப்பாளர்கள் வரிகளை சத்தத்தால் சாகடித்து விடுகிறார்கள். அப்படி செய்யாமல் வரிகளை புரியும்படி இசையமைத்திருக்கும் ராஜேஷுக்கு எனது பாராட்டுகள். படம் நிச்சயம் வெற்றி பெறும்.

தயாரிப்பாளர் சங்கம் சமீபத்தில் போட்ட தீர்மானத்தின்படி படங்கள் வெளியாகி மூன்று நாட்கள் கழித்தே விமர்சனம் செய்யுங்கள். யூடியூப் வீடியோக்களில் தலைப்பு என்ற பெயரில் பல தவறான விஷயங்களை போடுகிறீர்கள். வீடியோவில் இருக்கும் விஷயத்திற்கும் அந்த தலைப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றாலும், அதுபோன்ற தவறான தலைப்புகளை வைப்பது அதிகரித்து விட்டது. தயவு செய்து அதை தவிர்க்குமாறு வேண்டுகோள் வைக்கிறேன். மேலும், உங்களுடைய விமர்சனங்கள் எங்களை செதுக்க வேண்டுமே தவிர சிதைக்கும்படி இருக்க கூடாது என்றும் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

இயக்குநர் பொன்ராம் பேசுகையில், “இயக்குநர் எஸ்.பி.ராஜ்குமார் சாரின் காமெடிகளை நான் அதிகம் பின் தொடர்வேன். நானும் ஒரு காமெடி பட இயக்குநர் தான். வடிவேலுவுடன் சேர்ந்து பல மறக்க முடியாத காமெடிகளை எஸ்.பி.ராஜ்குமார் கொடுத்திருக்கிறார். நிச்சயம் இந்த படத்திலும் அப்படி பல காமெடிகளை வைத்திருப்பார் என்று நம்புகிறேன். எனவே இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும்” என்றார்.
தயாரிப்பாளர் கே.ராஜன் பேசுகையில், ‘படம் எடுப்பது எவ்வளவு பெரிய டார்ச்சர் என்பதை ஒரு தயாரிப்பாளராக உணர்ந்திருக்கிறேன். நான் 9 படங்கள் எடுத்துள்ளேன். அதுவரை வில்லனாக நடித்துக் கொண்டிருந்த சரத்குமாரை எனது தங்கமான தங்கச்சி படம் மூலம் ஹீரோவாக்கினேன். அனால் சரத்குமாரோ சூரியன் படத்தில் தான் ஹீரோவானதாக இதுவரை சொல்லிக் கொண்டிருக்கிறார். ஒரு தயாரிப்பாளராக எவ்வளவு அவமானங்களை நான் சந்தித்தேன் என செல்வமணிக்குத் தெரியும். அதனால் இந்த படத்தை தயாரித்துள்ள இசையமைப்பாளர் ராஜேஷ் தொடர்ந்து நாலைந்து படத்துக்கு இசையமைத்து சம்பாதித்து விட்டு அதன்பிறகு தயாரிப்பை தொடருங்கள்’’ என்றார்.

கே.ராஜன் தனது படத்தயாரிப்பாளரை தொடர்ந்து படங்களை தயாரிக்காமல் இசையமைக்க மட்டும் சொன்னதால், மேடையில் இருந்த நடிகர் சென்றாயன் குறுக்கிட்டு பேச முயற்சி செய்தார். எங்கள் தயாரிப்பாளரை அடுத்து படம் தயாரிக்க வேண்டாம் என்று எப்படி சொல்லலாம் என்று அவர் கேட்க, பதிலுக்கு பேசிய கே.ராஜன், இசையமைத்து சம்பாதித்த பிறகு படம் எடு என்று தான் சொன்னேன். உனக்கு அவசரம்னா நாங்க வேறு வேலை வாங்கித் தருகிறோம்; உட்கார்’ என்று உத்தரவிடும் தொனியில் சொல்ல, சென்றாயன் அதிர்ந்து போய் அமைதியானார்.
பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி பேசுகையில், ‘லோக்கல் சரக்கு என்று சொல்லும்போது சரக்கு என்பது மதுபானம் மட்டும் இல்லை. இந்தியாவில் உற்பத்தி ஆகும் பொருட்கள் என்று எடுத்துக்கொள்ளலாம். ஒரு நாடு உள்நாட்டில் உற்பத்தி செய்யும் பொருட்களை பயன்படுத்தினால் அந்த நாடு வளம் அடையும். நான் இயக்கும் படம் வெளியாகும்போது என்னுடைய தயாரிப்பாளர் அவர் இருக்கும் தெருவிற்குக்கூட வரக்கூடாது என்பார். வெற்றி தான் சினிமாவில் நண்பன். புலன் விசாரணையில் வெற்றி பெற்றதும் உடனே அடுத்த படத்திற்கு பேச ஆரம்பித்தார். தயாரிப்பாளர் வேதனை குறித்து தான் ராஜன் பேசி உள்ளார். என் கஷ்டத்திற்கு நான் தான் காரணம் என்பதை புரிந்து கொண்டால் போதும்.
நான் இயக்குநராக இருக்கும்போது பல கோடிகள் என் கையில் இருந்தது. சாலிகிராமத்தில் நான் ஒரு வீடு வாங்கினேன். அந்த தெருவை வாங்கும் அளவிற்கு என்னிடம் பணம் இருந்தது. ஆனால், தயாரிப்பாளர் ஆன பிறகு என் வீட்டைப் பாதுகாக்க முடியாத சூழல் வந்து விடுமோ என்ற பயம் இருந்தது.
தயாரிப்பாளர்கள் ஒன்றாக இணைந்து ஒரு கட்டமைப்பை உருவாக்கினால் தான் சுமூகமாக இருக்க முடியும். திரைப்படத்துறையில் அனைவரும் பகிர்ந்து கொண்டால் தான் லாபம் வரும். நஷ்டம் தயாரிப்பாளருக்கு; லாபம் மற்றவர்களுக்கு என்று தற்போது நிலைமை மாறியுள்ளது” என்றார்.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2022/09/393cf74e-9dd0-4bd2-9450-2d6b943b0a3e-682x1024.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2022/09/393cf74e-9dd0-4bd2-9450-2d6b943b0a3e-150x150.jpgrcinemaசினி நிகழ்வுகள்யோகிபாபு மற்றும் நடன இயக்குநர் தினேஷ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் படம் ‘லோக்கல் சரக்கு’. நாயகியாக உபாசனா நடித்திருக்கிறார். டிஸ்கவர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை எஸ்.பி.ராஜ்குமார் எழுதி இயக்கியுள்ளார். வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ் இசையமைத்திருப்பதோடு படத்தை தயாரித்தும் உள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று காலை சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது. இதில் நடிகர் ராதாரவி, தயாரிப்பாளர் கே.ராஜன், பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி, பாடலாசிரியர் சினேகன்,...