காதலை வெறுக்கும் ஹீரோ கார்த்திக் மதுசூதனனுக்கு பெண்களின் நட்பு பிடிக்கும். ஆனால் காதல் பிடிக்காது. கல்யாணம் பற்றி பேசவே கூடாது. பெண்கள் விஷயத்தில் ‘பிக்கப் அண்ட் டிராப்’ தான் அவனது கொள்கை.
இதற்கிடையே திருமணம் ஒன்றில் நாயகி ஷ்ரிதா சிவதாஸை சந்திக்கும் ஹீரோ, வழக்கம் போல பிக்கப் பண்ண முயற்சிக்க, ஆனால் அதற்கு இடம் கொடுக்காத நாயகி, ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்டு காதலை இனிமையாக்கலாம் என்க…
நாயகனோ தனது கொள்கைக்கு காதல் சரிப்பட்டு வராது என்று மறுத்து விடுகிறான். கால ஒட்டத்தில் ஷ்ரிதாவை மறக்க முடியாமல் தவிக்கும் நாயகன், அதை காதல் என்று உணர்கிறான். ஷ்ரிதாவை சந்தித்து, திருமணம் செய்து கொள்வோம் என்கிறான். நாயகியோ, ‘அது முடியாது. ஏற்கனவே 5 வருடமாக ஒருவரை காதலித்து வருகிறேன்’ என்று அதிர்ச்சி கொடுக்க…
விஷயத்தை கொஞ்சம் லேட்டாக புரிந்து கொண்ட நாயகியின் பெற்றோர் மகளுக்கு வேறு மாப்பிள்ளை பார்க்க, நாயகியின் காதலை மறக்க முடியாத நாயகன் அவளைத் தேடி வர, அதேநேரம் நாயகியின் ஐந்து வருட காதலனும் கல்யாண மண்டபத்துக்கு வர…
முடிவு என்னாகிறது? நாயகி யாரை திருமணம் செய்து கொண்டாள் என்பது எதிர்பாராத சில பல ட்விஸ்ட்டுகளுடன் கூடிய கிளைமாக்ஸ்.
நாயகனுடன் இணைந்து திரைக்கதை வசனம் எழுதி படத்தை இயக்கி இருப்பதோடு படத் தொகுப்பும் செய்து இருக்கிறார் சாம் ஆர்.டி.எக்ஸ். இன்னொருவனைக் காதலிப்பதை நாயகி ஏன் நாயகனிடம் சொல்லாமல் தள்ளிப் போட்டாள்? என்பது நாயகி கேரக்டரில் சறுக்கலை ஏற்படுத்தி விடுகிறது.

அறிமுக நடிகர் என்ற உணர்வே தோன்ற விடாமல் நடிப்பால் நம்மை ஈர்த்துக் கொள்கிறார், நாயகன் கார்த்திக் மதுசூதன். பெண்களை வசப்படுத்தும் இடங்களில் அவரது ஸ்டைலும் நடிப்பும் அட்டகாசம். நாயகியாக வரும் ஷ்ரிதா சிவதாஸ் கிளைமாக்ஸ் ஏரியாவை குத்தகைக்கு எடுத்துக் கொள்கிறார்.

கார்த்திக்கின் நண்பனாக வரும் அர்ஜுன் மணிகண்டனுக்கு கதையில் பெரிய இடம் இல்லை என்றாலும், கிடைத்த இடத்தில் சிக்சர் அடிக்கிறார். அறிமுக இசையமைப்பாளர் கே.சி.பாலசாரங்கன் இசையில் பாடல்கள் காதுக்கு இனிமை. காதலுக்கு புதிய விளக்கம் சொல்லும் அந்த கிளைமாக்சில் நிற்கிறார்கள், இயக்குனர்கள்.