கட்டிடத்தொழிலாளியான கருணாஸின் மனைவி ரித்விகா பிரசவவலி ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் குழந்தை பேற்றுக்காக அனுமதிக்கப்படுகிறார். அங்கு அவருக்கு உதவியாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார் இனியா. இருவருக்கும் இடையே ஏற்கனவே முன்பகை இருந்து வரும் நிலையில் திடீரென்று ரித்விகா காணாமல் போக, இன்னொரு பக்கம் மருத்துவமனையின் கழிவுநீர் தொட்டியில் பிணமாக மிதக்கிறார் இனியா.
மனைவியை காணாததால் அதிர்ச்சியடைந்த கருணாஸ், பச்சிளங் குழந்தையுடன் காவல் நிலைய படியேறி மனைவியை கண்டுபிடித்து தருமாறு கதறுகிறார்.

காணாமல் போன ரித்விகா என்ன ஆனார்? இனியாவின் இறப்புக்கு காரணம் என்ன? குழந்தையும் கருணாசும் ்என்னவானார்கள்? விடை, கொஞ்சமும் எதிர்பார்த்திராத கிளைமாக்ஸ்.
கருணாஸூக்கு கனமான கதாபாத்திரம். கைக்குழந்தையோடு மனைவியை தேடி பரிதவிப்பது, காவல் நிலையத்தில் மனைவியை கண்டுபிடித்து தரக்கோரி கெஞ்சுவது, அதிகாரவர்க்கத்தை எதிர்த்து எதுவும் செய்ய முடியாத இயலாமை என பல இடங்களில் கருணாஸ் கதாபாத்திரமாகவே மாறி இருக்கிறார். போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் ‘பாகுபலி’ பிரபாகரின்மிகையில்லாத நடிப்பு கவனிக்க வைக்கிறது.அந்த வித்தியாசமான போலீஸ் ஏட்டு கேரக்டரில் அருண் பாண்டியன் அழுத்தமான முத்திரை பதிக்கிறார். இனியா கொஞ்சம் வந்தாலும் தனித்து தெரிகிறார். உயர் போலீஸ் அதிகாரி உமா ரியாஸ் இன்ஸ்பெக்டரை எச்சரிக்கும் காட்சியில் ‘புகையும் பொறியுமான’ நடிப்பு கவனிக்க வைக்கிறது.
ஒரு காட்சிக்கும் அடுத்த காட்சிக்கும் இடையே என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை இறுதிவரை சஸ்பென்சாக கொண்டு சென்றதில் இயக்குநர் ராம்நாத், சுலபத்தில் பாசாகி விடுகிறார். தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக ரித்விகாவை வைத்து அதிகார வர்க்கம் ஆடும் ஆட்டம் நெஞ்சுக்குள் படபடப்பை ஏற்றி விடுகிறது.
ஸ்ரீகாந்த் தேவா இசையில் ‘தேன் மிட்டாய் மாங்காத் துண்டு’ பாட்டில் தேனின் ருசி. மகேஷ் முத்துசாமியின் கேமரா, கதையோடு பயணித்து ஈர்க்கிறது. ‘நம்மை விட சிறந்த பேச்சாளர் பணம் தான்’ என்ற ஒரு வரி வசனம் தான் மொத்தக் கதைக்கும் ஜீவன். அந்த கிளைமாக்ஸ் நிஜமாகவே நெஞ்சில் பாரம் ஏற்றி விடுகிறது.