பாலியல் தொழிலாளி சாயாசிங் ஒரு குழந்தைக்கு தாயாகிறார். அதன்பிறகு தொழிலை விட்டு விட்டு குழந்தைக்காக வாழ முடிவெடுக்கிறார். இந்நிலையில் அந்தக் குழந்தைக்கு மிகவும் சிக்கலான எலும்பு மஜ்ஜை நோய் ஏற்பட, குழந்தையின் தந்தை தனது எலும்பு மஜ்ஜையைத் தானமாக தந்தால் மட்டுமே அது தீரும் என மருத்துவர்கள் சொல்ல…

இதனால் குழந்தையின் தந்தையை கண்டு பிடிக்க வேண்டிய கட்டாயம் சாயாசிங்குக்கு. அவரது கணக்குப்படி போலீஸ் அதிகாரி தம்பி ராமையா, அமைச்சர் மகன் துஷ்யந்த் இருவரில் ஒருவர் குழந்தையின் உண்மையான தந்தை என்று நம்புகிறார்.
அதோடு குழந்தையின் சிகிச்சைக்கு பெருமளவில் பணமும் தேவைப்பட…உண்மையான தந்தை உதவினாரா? குழந்தை நோயில் இருந்து விடுபட்டதா? என்பது மீதிக்கதை.
குழந்தையின் பெயரான லில்லியையும். சாயாசிங்கின் பெயரான ராணியையும் இணைத்து லில்லிராணி என்று தலைப்பு வைத்து விட்டார் இயக்குனர்.
பாலியல் தொழிலாளியாக நடித்திருந்தாலும் துளியும் ஆபாசமின்றி நாகரிகமான ஆடைகளில் வந்து கவனம் ஈர்க்கிறார் சாயாசிங். குழந்தைக்காக அவர் போராடத் தொடங்கியதில் இருந்து அவரை ஒரு பாசமுள்ள தாயாகவே உணர முடிகிறது.
போலீஸ் அதிகாரி தம்பி ராமையாவின் புத்திசாலித்தனமே திரைக்கதைக்கு தோள் கொடுக்கிறது. குழந்தை விஷயத்தில் அவரது தடுமாற்றமும், தட மாற்றமும் ரசிக்க வைக்கிறது.
அமைச்சர் மகனாக வரும் துஷ்யந்த்தும் ஓ.கே.
அமைச்சராக வரும் ஜெயப்பிரகாஷ் கிளைமாக்ஸ் திருப்பத்துக்கு உதவுகிறார்.
சிவதர்ஷனின் ஒளிப்பதிவும் ஜெர்வி ஜோஷ்வா இசையும் ராமகிருஷ்ணன் இயக்கிய இந்த படத்துக்கு பக்கபலம். வழக்கமான சினிமாவில் இருந்து வேறுபட்டு நிற்கிறாள், இந்த லில்லி ராணி.