மகனுக்கு மணமுடித்து பேரன் பேத்தி எடுக்கவேண்டிய அம்மா கர்ப்பமானால்…இந்த ஒரு வரி கதைக்குள் காமெடி கதகளி, பேமிலி சென்டிமென்ட் என்று சிலம்பமே ஆடியிருக்கிறார்கள். 2018-ல் இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற ‘பதாய்ஹோ’ படத்தின் இந்த தமிழ் வடிவம் நிஜமாகவே அனுபவிக்க வேண்டிய ஆச்சரியம்.
அம்மாவின் காலம் கடந்த அந்த கர்ப்பத்தை அந்த குடும்பம் எப்படி எடுத்துக் கொள்கிறது? உறவும் சுற்றுப்புறமும் அதை எந்த மாதிரி பார்க்கிறது என்பதை ‘வீட்ல விசேஷமாக்கி, நம்மையும் பரவசமாக்கியிருக்கிறார்கள்.
பெற்றோராக சத்யராஜ்-ஊர்வசி. மகனாக ஆர்.ஜே.பாலாஜி. பாட்டியாக கே.பி.சி.ஏலலிதா என அந்த கூட்டு்க் குடும்ப கும்மியடிப்புக்குள் தற்போது தாய்மையடைந்திருக்கும் அந்த தாய் எந்த மாதிரியாக கண்டு கொள்ளப்படுகிறாள் என்பது பரபரப்புக்கு பஞ்சமில்லாத திரைக்கதை.
மகனின் கல்யாண வயதில் தாய்மையடைந்திருக்கும் அம்மாவாக ஊர்வசி. தனது கர்ப்பத்தை மகன்களும் மாமியாரும் ஆரம்பத்தில் குத்திக்காட்டும்போது மனதளவில் உடைந்து போகும் அந்த தாய்க்கு அவர் திரை வடிவம் கொடுத்திருப்பது தனி அழகு. 3 பவுன் நகைக்காக கிடைக்கிற சமயங்களில் எல்லாம் குத்திக் காட்டிக் கொண்டிருக்கும் மாமியார், இ்ப்போது பேரன் பேத்திகளை கொஞ்ச வேண்டிய வயதில் தனது மருமகள் தாய்மை அடைந்தால் சும்மா விடுவாரா… அவரிடம் மிக்சியில் போட்ட மிளகாயாக அரைபடுகிற காட்சிகளில் எல்லாம் நிஜமாகவே இந்த ஊர்வசி, நடிப்பு ராட்சசி.
இதே மாமியார் தன் மகள்களிடம் மருமகளை விட்டுக் கொடுக்காமல் பேசுகிற இடத்தில் ஊர்வசியிடம் இருந்து வெளிப்படும் அந்த ஆனந்த அழுகை ‘அடடே அற்புதம்’ ரகம். பிரசவ வலி நேரத்தில் கணவருக்கு விடும் அந்த அறை, ஊர்வசி ஸ்பெஷல்.
அந்த மாமியார் லலிதா ‘அக் மார்க்’ அமர்க்கள நடிப்பில் பிரகாசிக்கிறார். மருமகளை மகன் முன்பு கரிச்சுக் கொட்டுகிற இடத்திலும், அதே மருமகளை மகள்களிடம் விட்டுக் கொடுக்காமல் வானுயர புகழும் இடத்திலும் நடிப்பில் ஆயிரம் வோல்ட் பிரகாசம்.
அந்த அப்பா கேரக்டரில் மீண்டும் நடிப்புச் சுடராக திரும்பக் கிடைத்திருக்கிறார், சத்யராஜ். மனைவி கர்ப்பம் என்பதை தனது தாயாரிடம் சொல்லி விட்ட திருப்தியில் ராஜநடை போடும் இடத்திலும், அதே தாய் காது மிஷின் இல்லாமல் தான் சொன்ன எதையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை என்பதை தெரிந்து கொள்ளும் இடத்திலும் ரியாக்–ஷனில் இந்த கட்டப்பா நடிப்பில் மன்னாதி மன்னனய்யா.

பள்ளி ஆசிரியராக வரும் ஆர்.ஜே.பாலாஜி, தன் அம்மாவின் கர்ப்பம் தெரிந்தது முதல் கரகம் எடுத்து ஆடாத குறையாக விரைக்கிறார். முறைக்கிறார். காதலி அபர்ணா பாலமுரளியிடம் இதை சொல்ல தயங்கும் இடத்தில் அப்ளாஸ் அள்ளுகிறார். காதலியின் தாயார் இதையே ஒரு அவமானச்சின்னமாக சொன்னதை கேட்டு வார்த்தைகளை கொட்டும் இடத்தில் உயரப் பறக்கிறது இவர் நடிப்புக்கொடி. அம்மாவுக்காக காதலியின் அம்மாவிடம் மன்னிப்பு கேட்கப் போகிற இடத்திலும் ‘நடிப்பென்று தெரியாத அந்த நடிப்பு ரசிகனுக்கு புதுசு.

இளமைத் துள்ளலாக அபர்ணா பாலமுரளி அட்டகாசம். காதலனுக்கும் அம்மாவுக்கும் இடையே நடக்கும் வாதம் நீண்டு கொண்டே போக, செய்வதறியாது திகைக்கும் அந்த இடம் நடிப்புக்கு ஒரு பதம். ‘எல்.கே.ஜிக்கு இப்ப எவ்ளோ பீஸ் வாங்குறீங்க?’ என்று சத்யராஜ் கேட்டதை நினைத்து நினைத்து சிரிக்கும் இடத்தில் நமக்கும் சிரித்து சிரித்து பொறையேறிப் போய் விடுகிறது.

பள்ளியில் அடி வாங்கி வந்ததை அண்ணன் பாலாஜியிடம் விவரிக்கும் தம்பி விஷ்வேஷ், அபர்ணாவின் அம்மா பவித்ரா லோகேஷ் இருவருமே தங்கள் பாத்திரங்களில் பளபளக்கிறார்கள். ஒரே காட்சி என்றாலும் யோகிபாபு சிரிப்புக்கு இடம் கொடுத்து விட்டு போகிறார்.

கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையில் அந்த தாய்மையின் சிறப்பை சொல்லும் பாட்டு பரவசம். காட்சிகளில் இயல்பாக கடந்து போகிறது கார்த்திக் முத்துக்குமரனின் கேமரா.

ஆர்.ஜே.பாலாஜி-என்.ஜே.சரவணன் இணைந்து இயக்கிய இந்த ‘வீட்ல விசேஷம்’ ரசிகர்களுக்கான விசேஷம்.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2022/06/c262efb6-4746-419b-9ad3-d1614fda862b-1024x682.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2022/06/c262efb6-4746-419b-9ad3-d1614fda862b-e1655469910114-150x150.jpgrcinemaசினிமா செய்திகள்திரை விமர்சனம்மகனுக்கு மணமுடித்து பேரன் பேத்தி எடுக்கவேண்டிய அம்மா கர்ப்பமானால்...இந்த ஒரு வரி கதைக்குள் காமெடி கதகளி, பேமிலி சென்டிமென்ட் என்று சிலம்பமே ஆடியிருக்கிறார்கள். 2018-ல் இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற ‘பதாய்ஹோ’ படத்தின் இந்த தமிழ் வடிவம் நிஜமாகவே அனுபவிக்க வேண்டிய ஆச்சரியம். அம்மாவின் காலம் கடந்த அந்த கர்ப்பத்தை அந்த குடும்பம் எப்படி எடுத்துக் கொள்கிறது? உறவும் சுற்றுப்புறமும் அதை எந்த மாதிரி பார்க்கிறது என்பதை ‘வீட்ல விசேஷமாக்கி,...