சர்வதேசப் போட்டிகளுக்கு நாய்களை தயார் செய்து, சாம்பியன்ஷிப் பட்டம் பெறுவதை கௌரவமாக நினைக்கும் தொழிலதிபருக்கு அவரது நாய்ப் பண்ணையில் சைபீரியன் ஹஸ்கி ஒன்று பார்வையில்லாமல் பிறக்க, அதை கொல்ல தன் உதவியாளர்களுக்கு உத்தரவிடுகிறார். ஆனால் உயிர் தப்பி சிறுவன் அர்னவ் வீட்டில் சிம்பா என்ற பெயரில் வளரும் அந்த நாய்க்குட்டி ஒருகட்டத்தில் தன்னை கொல்லச் சொன்ன தொழிலதிபருக்கே சிம்ம சொப்பனமாக மாறுகிறது.

ஆம், சாம்பியன்ஷிப் போட்டியில் இப்போது அந்த நாயும் ஒரு முக்கிய போட்டியாளர். தோற்பதை தனது கனவிலும் விரும்பாத அந்த தொழிலதிபர், சிம்பா போட்டியில் கலந்து கொள்ள முடியாதபடி தன் செல்வாக்கால் தடை ஏற்படுத்துகிறார். தடைகளைத் தாண்டி சிம்பாவால் அந்த போட்டியில் கலந்து கொள்ள முடிந்ததா? வெற்றி வாகை சூடியதா? என்பது இதயத் துடிப்பை எகிற வைக்கும் ‘திக்…திக்…’ கிளைமாக்ஸ்.

பொருளாதாரத்தில் தன்னிறைவு பெறாத நடுத்தரக் குடும்பம். மகனின் படிப்புக்கு கடன் வாங்கி அதை அடைக்க போராடும் தந்தை. அதற்காக மகனை அவ்வப்போது சீண்டும் மகனின் தந்தை என ஒரு நடுத்தரக் குடும்பத்தின் ப ற்றாக்குறை வாழ்க்கையை எடுத்த எடுப்பிலேயே கண்முன் நிறுத்தி விடுகிறார், இயக்குனர். இந்த குடும்பத்திற்கு மேலும் செலவு வைக்க ஒரு நாய்க் குட்டி வந்து சேர…அதன் வருகை அந்த குடும்பத்துக்கு மேலும் நெருக்கடியா? அல்லது சுகபோகமா? என்பதை இயல்பான கதைப்போக்கில் காட்சிப்படுத்தியிருக்கிற திரைக்கதை பார்வையாளனை படத்துடன் நெருக்கமாக்கி விடுகிறது.

அப்பாவாக விஜயகுமார் மகனாக அருண் விஜய், அவரது மகனாக அர்னவ் என ஒரே குடும்பத்து நட்சத்திரங்கள் படத்தை ரசிகர்களுடன் இன்னும் நெருக்கமாக்கி விடுகிறார்கள்.

முதல் படத்திலேயே தனது இயல்பான, துறுதுறு நடிப்பால் பார்வையாளர்களை கட்டிப் போட்டு விடுகிறான், அர்னவ். அவனுக்கும் குட்டி நாய்க்குமான பிரியம் அத்தனை அன்யோன்யம். நாய்க்கு பார்வையில்லை என்று தெரிந்து கொண்டதும் பார்வை கிடைக்க முயற்சி மேற்கொள்வது தொடங்கி அதை போட்டிக்கு தயார் செய்வது வரை அர்னவ் அட்டகாசப்படுத்துகிறான், நடிப்பில்.

மகனுக்காக பள்ளி பிரின்சிபாலிடம் பேச்சு வாங்குவது, மகனின் நாய்ப்பாசம் தெரிந்து அதை தொலைத்த இடத்தில் தேடுவது, என தந்தைப் பாசத்தின் பிரதிநிதியாக அருண்விஜய். இவரது பிளாஷ்பேக் ‘குதிரை வேகத்தில்’ கடந்து போனாலும் நெஞ்சில் நிற்கிறது.

மகனுக்காக பரிந்து பேசும் பாச அம்மாவை கண்முன் நிறுத்துகிறார், மகிமா நம்பியார்.

வில்ல தொழில் அதிபராக வினய் கம்பீரம். அவரது அடிப்பொடிகள் நாயை கடத்த வந்து வாரிக்கொள்ளும் இடங்களில் எல்லாம் குழந்தைகளின் கொண்டாட்டமாகி இருக்கிறார்கள். பொருளாதாரச் சுமையை சுட்டிக்காட்டி அவ்வப்போது மகனையும் மருமகளையும் கடுப்பேற்றும் கேரக்டரில் விஜயகுமார் தன் நடிப்பு சாம்ராஜ்யத்தில் வியாபித்து நிற்கிறார். அந்த பள்ளிக் குழந்தைகள்-சிம்பா தொடர்பான காட்சிகள் அத்தளை க்யூட். நாய்க்கும் அதன் பயிற்சியாளருக்கும் ஸ்பெஷல் பூங்கொத்து.
குழந்தைகள் படத்தில் ஒரு நாய் நெருக்கமாகும் கதை என்றாலும், அதோடு அருண்விஜய் குடும்பத்தின் இயல்பு வாழ்க்கையையும் இணைத்த விதத்தில் கவனம் பெறுகிறார், அறிமுக இயக்குனர் சரோவ் சண்முகம். பல காட்சிகளை முன்கூட்டியே ஊகிக்க முடிந்தாலும் அந்த ‘சாக்லெட் கிளைமாக்ஸ்’ அத்தனை இனிப்பு.

நிவாஸ் கே பிரசன்னாவின் இசையில் குழந்தைகள் பாடும் பாடல் ‘ஆஹா’ ரகம். கோபிநாத்தின் ஒளிப்பதிவில் ஊட்டி அத்தனை குளுமை.

குழந்தைகள் உலகத்தில் ராம.நாராயணன் காலத்தோடு நின்று போயிருந்த விலங்குகளையும் இணைந்த சிந்தனைக்கு ஒரு ஹாட்ஸ் ஆப்.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2022/04/pop.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2022/04/pop-150x150.jpgrcinemaசினிமா செய்திகள்திரை விமர்சனம்சர்வதேசப் போட்டிகளுக்கு நாய்களை தயார் செய்து, சாம்பியன்ஷிப் பட்டம் பெறுவதை கௌரவமாக நினைக்கும் தொழிலதிபருக்கு அவரது நாய்ப் பண்ணையில் சைபீரியன் ஹஸ்கி ஒன்று பார்வையில்லாமல் பிறக்க, அதை கொல்ல தன் உதவியாளர்களுக்கு உத்தரவிடுகிறார். ஆனால் உயிர் தப்பி சிறுவன் அர்னவ் வீட்டில் சிம்பா என்ற பெயரில் வளரும் அந்த நாய்க்குட்டி ஒருகட்டத்தில் தன்னை கொல்லச் சொன்ன தொழிலதிபருக்கே சிம்ம சொப்பனமாக மாறுகிறது. ஆம், சாம்பியன்ஷிப் போட்டியில் இப்போது அந்த நாயும்...