செல்பி பட விமர்சனம்

கிராமத்து இளைஞன் கனல் தன் தந்தையின் கட்டாயத்தால் என்ஜினியரிங் கல்லூரியில் சேர்க்கப்படுகிறான். தனக்கு விருப்பம் இல்லாத அந்த படிப்புக்கு தனது தந்தை அதிக கட்டணத்தைச் செலுத்தியதை தெரிந்து கொள்ளும் அவன், அதைத் திரும்பப் பெறுவதற்காக கல்லூரி நிர்வாகத்திடம் சண்டை போட்டு தோல்வி அடைகிறான். இந்நிலையில் கல்லூரி சீட்களுக்கு பொய்யான பற்றாக்குறையை உருவாக்கி, மாணவர்களின் பெற்றோரை ஏமாற்றி பெரும் பணம் சம்பாதிக்கும் ஒரு மாஃபியா இருப்பது கனலுக்கு தெரிய வர…
இப்போது அவனும் தன் நண்பர்களுடன்சேர்ந்து சீட்டுக்கு கமிஷன் வாங்கி பணம் குவிக்கிறான். இந்நிலையில் ஒரு பெரிய பல்கலைக்கழகத்தின் தலைவருக்கு நெருக்கமான கல்லூரி சீட் மாஃபியா தலைவன் ரவிவர்மாவுடன் நேரடியாக மோத நேரிடுகிறது. முடிவு என்னாகிறது என்பது திகுதிகு அனல் திரைக்கதை.
கனல் கேரக்டரில் வரும் ஜி.வி.பிரகாஷூக்கு இதுவரை அவர் ஏற்றிராத பாத்திரம். அநீதிக்கு பொங்கும் அந்த ஆக்ரோஷத்தில் அந்த பாத்திரம் பளபளக்கிறது. தந்தையிடம் முறைப்பு. நண்பனின் தாயிடம் பரிவு, காதலி வர்ஷா பொல்லம்மாவிடம் அன்யோன்யம் என கலந்து கட்டி ரசிக்க வைக்கிறார். நாயகி வர்ஷா பொல்லம்மா அழகில் ஈர்க்கிறார்.
செய்யும் தொழில் தவறானது என்றாலும் அதைத் திமிரோடு செய்து கவனம் ஈர்க்கிறார் கல்வித் தந்தை சங்கிலி முருகன். வாகை சந்திரசேகர், சுப்ரமணியம் சிவா, ஸ்ரீஜா ரவி, வித்யா பிரதீப் கிடைத்த கேரக்டர்களில் பளிச்சிடுகிறார்கள்.
விஷ்ணு ரங்கசாமியின் ஒளிப்பதிவும் ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசையும் படத்தின் இன்ன பிற பிளஸ்.
பெற்றோர்களுக்கு தங்கள் வாரிசுகளின் கல்வி மேல் இருக்கும் கனவு மற்றும் ஆசையை வைத்து அவர்களிடம் பணம் பறிக்கும் கல்லூரிகள், அதன் பின்னணியில் இருக்கும் மாஃபியா கும்பல் பற்றி அம்பலப்படுத்தி முதல் படத்திலேயே இயக்குனர் மதிமாறன் சொல்லி அடித்திருக்கிறார், ‘கில்லி.’ அந்த கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி படபடப்பின் உச்சம்.
