சினிமா செய்திகள்திரை விமர்சனம்

பூ சாண்டி வரான் திரை விமர்சனம்

மலேசியாவில் பழைய நாணயங்களை சேகரிக்கும் பழக்கம் உள்ள மாற்றுத் திறனாளி மற்றும் அவரது நண்பர்கள் இருவருக்கும் (தினேஷ் சாரதி கிருஷ்ணன், லோகன் நாதன், கணேசன் மனோகரன்) ஆவிகளுடன் பேசும் ஆசை வருகிறது. பாண்டியர் கால பழம்பெரும் நாணயம் ஒன்றை பயன்படுத்தி அவர்கள் ஒரு ஆவியுடன் பேச, தன்னை மல்லிகா என்று அறிமுகப்படுத்திக் கொண்ட ஒரு பெண்ணின் ஆவி தொடர்பில் வருகிறது. துரோகத்தால் எதிரிகள் தன்னை நதிக்குள் தள்ளி கொன்றதை விவரிக்கிறது. தொடர்ந்து இவர்கள் சில விஷயங்கள் பற்றி கேட்க, அந்த ஆவி சில நிபந்தனைகள் விதிக்க, இவர்கள் மறுக்க, ஒரு கட்டத்தில் விளைவுகள் விபரீதம் ஆகிறது. அதில் ஓர் உயிரும் போகிறது. அப்புறம் நடந்தது என்ன என்பது திகிலும் திரில்லருமான கிளைமாக்ஸ்.
தமிழகத்தில் இருந்து செல்லும் ஆராய்ச்சியாளராக நம்ம ஊர் மிர்ச்சி ரமணா சிறப்பாக நடித்துள்ளார். மலேசியத் தமிழ் நடிக நடிகையரின் அந்த பேச்சு வழக்கும் உச்சரிப்பும் இனிமை.
சங்ககாலம், ராஜேந்திர சோழன், பாண்டியர்கள், கடாரம், தமிழின் தொன்மை பற்றியெல்லாம் இப்போது ஒரு தமிழ்ப் படம் பேசுகிறது என்பது பரவசம் கலந்த அதிசயம்.
அசலிசம் பின் முகமது அலியின் ஒளிப்பதிவும், டஸ்டினின் இசையும் ஆகியவையும் திகில் கதைக்கான தில்லை தொடக்க முதலே கொண்டு வந்து விடுகிறது.

பூச்சாண்டி என்றால் ஏதோ பேய் என்று நினைப்பவர்களுக்கு உண்மையில் அது என்ன என்ற விளக்கம் ‘அடடே’ போட வைக்கிற ஆச்சரியம்.

குறைவான லொக்கேஷன்களில் பத்துக்கும் குறைவான கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு சிறப்பான படத்தைக் கொடுத்த இயக்குனர் விக்கிக்கு ஸ்பெஷல் பாராட்டு. எளிமையான மேக்கிங்கில் படம் பார்ப்பவர்களை கட்டிப் போட்டு கடைசியில் இன மொழி வரலாறு, ஆன்மிகம் எல்லாம் சொல்லி ரசிகர்களின் கொண்டாட்டமாகி இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *