திரை விமர்சனம்திரைப்படங்கள்

மகான் பட விமர்சனம்

படத்தின் கதை 1968-ல் இருந்து தொடங்குகிறது. ஆடுகளம் நரேன் சாராயக்கடைகளுக்கு எதிராக போராட்டம் நடத்துகிறார். தனது மகன் விக்ரமை காந்தி போல ஒரு மகானாக வளர்க்க வேண்டும் என விரும்புகிறார். விக்ரமோ சிறு வயது நண்பர்களுடன் சேர்ந்து குடி, சூதாட்டம் என திரிகிறார். ஒருகட்டத்தில் விக்ரம், பாபி சிம்ஹா இருவரும் தமிழ் நாட்டில் மது வியாபாரத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார்கள்
இதன் காரணமாக விக்ரமின் மனைவி மற்றும் மகன் விக்ரமை விட்டு பிரிய… சில ஆண்டுகள் கழித்து காவல் துறை அதிகாரியாக வரும் மகன் துருவ் விக்ரமிற்கும், அப்பா விக்ரமிற்கும் நடக்கும் மோதலில் யார் வென்றார்கள் என்பது கதை.

‘தவறு செய்ய அனுமதிக்காத சுதந்திரம், சுதந்திரமே அல்ல’ என்ற காந்தியின் வாசகங்கள் தான் கதையின் அடிநாதம்.
காந்தி மகானாக விக்ரம், தாதாபாய் நௌரோஜியாக துருவ், சத்யவானாக பாபி சிம்ஹா, நாச்சியாராக சிம்ரன், ராக்கியாக சனந்த் என அனைவருமே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
விக்ரம் பற்றி சொல்லவே வேண்டாம். படத்தை நகர்த்துவதே அவர் தான். நீண்ட நாட்களுக்கு பிறகு நடிப்பில் ருத்ர தாண்டவமே ஆடியுள்ளார், பாபி சிம்ஹா நட்பு கிடைத்தவுடன், அவருடன் சேர்ந்து சரக்கு சாம்ராஜியத்தை நிலை நாட்ட அவர் போடும் திட்டமெல்லாம் அதிரடிச் சரவெடி. வளர்த்த கடா மார்பில் பாய்வது போல் விக்ரமின் ஆட்டத்தை அடக்க துருவ் விக்ரம் வந்ததும் படம் விறுவிறு ஆடுபுலி ஆட்டமாகி விடுகிறது.

விக்ரமின் மனைவியாக வரும் சிம்ரன், கணவரிடம் கோபித்துக் கொண்டு மகனுடன் வெளியேறும் இடத்தில் தன் இருப்பை நிரூபிக்கிறார். மகனாக வரும் துருவ் விக்ரம் இடைவேளை நேரத்தில் தான் ஆஜர். அதன்பிறகு படம் இன்னும் வேகம் பிடிக்கிறது. அப்பாவின் சாம்ராஜ்யத்தை தனது அதிரடி வேட்டையால் துருவ் சரிக்கும்போது நாளைய நம்பிக்கை நட்சத்திரம் கண்முன் தெரிகிறது. விக்ரமின் தொழில் நண்பராக வரும் பாபிசிம்ஹா, நடிப்பிலும் உடல் மொழியிலும் ‘ஆஹா’ சொல்ல வைக்கிறார்.

சந்தோஷ் நாராயணன் பின்னணி இசையில் ‘உள்ளேன் அய்யா’ சொல்கிறார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் கேமரா, கலை இயக்குனர் மோகனுடன் இணைந்து கதை நிகழும் கால கட்டங்களை கண்முன் நிறுத்தி வியக்க வைக்கிறார்கள். அதிரடி கேங்ஸ்டர் கதையை தந்தை-மகன் பின்னணியில் சுவாரசியம் குறையாமல் தந்த விதத்துக்காகவே கொண்டாடலாம், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *