திரை விமர்சனம்திரைப்படங்கள்

விமர்சனம் கடைசி விவசாயி

கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, தயாரிப்பு, இயக்கம். – மணிகண்டன்

இசை – சந்தோஷ் நாராயணன் & ரிச்சர்ட் ஹர்வி

நடிகர்கள் – ‘தெய்வத்திரு’ நல்லாண்டி, ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, ‘யோகி பாபு’, ரேச்சல் ரெபெக்கா மற்றும் பலர்.

‘காக்கா முட்டை’, ‘ஆண்டவன் கட்டளை’, ‘குற்றமே தண்டனை’ ஆகிய படங்களை இயக்கி, விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் தரமான படைப்புகளை வழங்கும் கலைஞர் என்ற அடையாளத்தை பெற்றிருக்கும் இயக்குநர் மணிகண்டனின் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் ‘கடைசி விவசாயி’ என்ற படைப்பு, எத்தகைய வரவேற்பு பெறும் என்பது குறித்து காண்போம்.

மழை பொய்த்து போனதாலும், விவசாயத்திற்கு ஆட்கள் கிடைக்காததாலும், தன்னுடைய நிலத்தில் மாடுகளை மேய்த்துக்கொண்டு, தினசரி வாழ்க்கையை நடத்தி வருகிறார் அந்த கிராமத்தின் முதிய விவசாயியான மாயாண்டி. அவரின் கடைசிக்காலகட்ட சுயசரிதையாக இப்படத்தின் கதைகளம் அமைந்திருக்கிறது.

அந்த ஊரில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று, அனைவருக்கும் கடன் வழங்கி, ஊர் மக்களை கடனாளியாக்கி, விவசாய பணிகளில் ஈடுபடாமல் வேறு பணிகளை செய்ய திசை திருப்புகிறது. மேலும் அந்த ஊரில் உள்ள உர விற்பனை நிலையம், மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளையும், வீரியமிக்க ரசாயனங்களை கொண்ட உரங்களையும் விற்பனை செய்கிறது. இதன் மூலம் இன்றைய சூழலில் கிராமப்புறங்களில் விவசாயம் என்பது திட்டமிடப்பட்டு மெல்ல மெல்ல அழிக்கப்பட்டும் – அழிந்து வரும் தொழிலாகவும் இருக்கிறது என்பதனை இயக்குநர் காட்சிகளாக போகிற போக்கில் விவரிக்கும் போது, பார்வையாளர்களில் மனதில் விவசாயம் குறித்த புரிதல் ஏற்படுகிறது. எளிய கிராமத்து மக்களை ஆதிக்கம் செலுத்த விரும்பும் கும்பல், எப்படி அவர்களை தங்கள் மாய வலைக்குள் வீழ்த்தி வளைத்து வைத்திருக்கிறது என்பதை கதாபாத்திரங்களாக காணும்போது நகரத்து மனிதர்களும், விவசாயிகளும் அவர்களின் சேவை தொழிலான விவசாயமும் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதனை கண்டு அதிர்கிறார்கள். இதற்காக இயக்குநரை மனதார பாராட்டலாம். மேலும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை விற்பனை செய்யும் ஒரு வியாபாரியிடம் மூத்த விவசாயியான மாயாண்டி, ‘இந்த விதைய கண்டுபிடிச்சவனுக்கு ஒரு ஆம்பள புள்ள பொறந்து, அவனுக்கு விதை கொட்டை இல்லாம இருந்தா.. எப்படி இருக்கும்’ என்று பேசும்போது, இவ்விவகாரம் குறித்து எளிய கிராமத்து மக்களின் அவர்களின் பாணியிலான எதிர்ப்பை உணர்ந்து கொள்ள முடிகிறது.

அத்துடன் அந்த ஊரில் நூற்றாண்டு பழமை மிக்க மரம் ஒன்றின் மீது இடி விழுகிறது. இதனை கண்டு அச்சப்படும் ஊர்மக்கள் ஓரிடத்தில் ஒன்றுகூடி, குலதெய்வத்தை முறையாக வழங்காததால் இத்தகைய கெடுபலன்கள் நடைபெறுகின்றன என கூறி, திருவிழா நடத்தி குலதெய்வத்தை வணங்கினால் நன்மைகள் நடக்கும் என நினைக்கிறார்கள். பிறகு திருவிழா நடத்த ஒப்புக் கொண்டு அதற்கான ஏற்பாடுகளை செய்கிறார்கள்.

இந்த நிலையில் குலதெய்வத்திற்கு படைக்க நெல் வேண்டும் என்பதற்காக அந்த ஊரின் மூத்த விவசாயியான மாயாண்டியிடம் ஊர் மக்கள் கோரிக்கை வைக்க, அவர் நெல்லைத் தர ஒப்புக் கொள்கிறார். இதற்காக அவர் தன்னுடைய நிலத்தில் ஒரு பகுதியில் விவசாயம் செய்கிறார். அதற்கான தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் போது, எதிர்பாராதவிதமாக அவர் மீது வழக்கு ஒன்று பாய்கிறது. அந்த வழக்கிலிருந்து மாயாண்டி விடுதலையானாரா..? குலதெய்வத்திற்கு அவர் விதைத்த நெல்லை அறுவடை செய்து, சாமிக்கு படைத்தாரா? திருவிழா நடைபெற்றதா..? போன்ற வினாக்களுக்கு உணர்வுபூர்வமான விடையளிக்கும் படமாக – படைப்பாக வெளியாகியிருக்கிறது ‘கடைசி விவசாயி’.

இதில் ராமையா என்ற சிறிய கதாபாத்திரத்தில் வித்தியாசமான தோற்றத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். மூத்த விவசாயியாக வரும் மாயாண்டியின் வாரிசாக நடித்திருக்கும் விஜய் சேதுபதி, புரியாத புதிராக.. மனப்பிறழ்வு ஏற்பட்டு அதற்கான வடிகாலாக இந்து ஆலயங்களுக்கு நடை பயணம் மேற்கொள்ளும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கிறார். அவரது தோற்றம், அவரது நடவடிக்கை, மற்றவர்களுடனான அவரது உறவு… ஆகியவை ரசிக்க வைக்கிறது.

படத்தில் கடைசி விவசாயியாக வாழ்ந்திருக்கும் மாயாண்டி என்ற கதாபாத்திரம், அவரது மகனாக நடித்திருக்கும் ராமையா என இந்த இரண்டு கதாபாத்திரங்களை கடந்து, மேஜிஸ்ட்ரேட்டாக நடித்திருக்கும் நடிகை ரேச்சல் ரெபெக்கா, அற்புதமான நடிப்பால் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்துகிறார்.

நடிப்பை பொருத்தவரை மாயாண்டியாக நடித்து நம்மை விட்டு பிரிந்து சென்ற நல்லாண்டி முதலிடம் பெறுகிறார். கிராமத்தில் வாழும் யோகி பாபு தன் நிலத்தை விற்று, யானையை வாங்கி அதனை ஊரில் நடமாட செய்து அதன்மூலம் வருவாய் ஈட்டுகிறார். இது சில இடங்களில் சிரிப்பை வரவழைத்தாலும், இதன் மூலம் இயக்குநர் உணர்த்த விரும்பிய கருத்தை – குறியீட்டை பாராட்டலாம்.

மணிகண்டனின் கதை இயல்பாக இருக்கிறது. திரைக்கதை யதார்த்தமாகவும், அதிகபட்ச நம்பகத்தன்மையுடன் இருக்கிறது. கதை, திரைக்கதையை கடந்து ஒளிப்பதிவாளராக மணிகண்டனின் நேர்த்தியான உழைப்பு, அவருடைய காட்சிக் கோணங்களும், அதற்கான பசுமை போர்த்திய நிலவியல் அமைப்பும் உருவாக்கி படைத்ததற்காக அவரை கைவலிக்க கைகுலுக்கி பாராட்டலாம். கடைசி விவசாயி படத்தில் கதாசிரியர், திரைக்கதையாசிரியர் என்பதை விட ஒளிப்பதிவாளராக இயக்குநர் மணிகண்டன் மிளிர்கிறார்.

படத்தில் நீதிமன்றத்தில் நீதியரசிக்கும், காவல்துறையினருக்கும் இடையே நடைபெறும் உரையாடல் பார்வையாளர்களுக்கு சிரிப்பை வரவழைக்கிறது. பாடல்கள் கேட்க கேட்க பிடிக்கும் ரகம். படத்தில் முருகனைப் பற்றிய பக்தி பாடல்கள் இடம்பெறும் சூழல் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசை இன்னும் மேம்பட்டதாக இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.

‘கடைசி விவசாயி’ என்றதும் விவசாயம் குறித்து அறிவுரையை வழங்கப் போகிறாறோ..! என்ற எதிர்பார்ப்புடன் திரையரங்கிற்கு நுழைந்தால்.. அறிவுரை எதுவும் இல்லாமல், ஒரு கிராமத்தில் வாழும் மூத்த விவசாயி ஒருவரின், விவசாயம் சார்ந்த தொழில்முறை வாழ்க்கையையும், அவரது முதுமைக் கால சமூக வாழ்க்கையையும் யதார்த்ததுடன் சொல்லி பார்வையாளர்களின் விழிகளை விரிய வைக்கிறார் ‘சிறந்த கதை சொல்லி’யான மணிகண்டன்.

கடைசி விவசாயி – அழிக்க இயலாத ஆர்கானிக் விவசாயி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *