‘ஜாங்கோ’ என்றால் ஜெர்மானிய மொழியில் ‘மீண்டும் எழுவேன்’ என்று அர்த்தம். கடந்த காலத்திற்கு சென்று வரும் படங்கள் தமிழில் இதுவரை வந்திருந்தபோதிலும், அதில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கதைக்களம் படத்தின் வரவை வரவேற்புக்குரியதாக்கி இருக்கிறது.

உத்தியோகம் ஒரு பெண்ணுக்கு அத்தியாவசியம் என்று நினைக்கும் நாயகி ,சில பல மனக்கசப்புகளால் தன் டாக்டர் கணவனிடம் இருந்து பிரிகிறார். மனைவி மீது கொண்ட காதலை மறக்க முடியாமல் தவிக்கும் நாயகன், டைம்-லூப் மூலம் இழந்த வாழ்க்கையை எப்படி மீண்டும் பெற்றுக் கொள்கிறான் என்பது சுவாரசிய திரைக்கதை.

‘டைம் லூப்’ என்றால் முதல்நாள் காலை 7 மணி முதல் இரவு 12 மணி வரை என்னவெல்லாம் நடைபெறுகிறதோ, அதே சம்பவம் அடுத்த நாளும் நடைபெறும். இந்த டைம் லூப்பை வைத்து தன் மனைவிக்கு ஏற்படும் ஆபத்தை நாயகன் எப்படி தடுத்து நிறுத்துகிறான் என்பதை சொன்ன விதத்திலும் நிமிர்ந்து நிற்கிறது படம்.
நாயகன் சதீஷ்குமார், அறிமுகம் என்றாலும் இயல்பான நடிப்பில் அசரடிக்கிறார். மனைவி மீதான காதல், எதிர்பாராது நடக்கும் சம்பவத்தால் கோபம் என நடிப்பில் பல இடங்களில் சிக்சராக விளாசித் தள்ளுகிறார்.

நாயகி மிர்ணாளினி தென்றலும் புயலுமான தனது வாழ்க்கை பின்னணியை நடிப்பால் கடக்கும்போது நம் மனதுக்குள்ளும் கடந்து போகிறார்.
போலீஸ் அதிகாரியாக வரும் கருணாகரனின் காமெடி சிரிக்க வைக்கிறது. அவர் கூறும் ‘புல்லட்’ உதாரணம் ரசிக்க வைக்கிறது. டைகர் தங்கதுரை, தீபா வேலுபிரபாகரன் பொருத்தமான கேரக்டர்களில் படத்தின் பொக்கிஷமாகிறார்கள்.கார்த்திக் கே தில்லையின் ஒளிப்பதிவும், ஜிப்ரானின் பின்னணி இசையும் கதையோடு இணைந்து சிறப்பு சேர்க்கிறது. கடந்த காலத்திற்கு சென்று வரும் பட வரிசையில், எதிர்பாராத ட்விஸ்ட் தந்து தமிழ்த்திரையின் நல்வரவாகியிருக்கிறார், இயக்கிய மனோ கார்த்திகேயன்.