இருளர் பழங்குடி மக்கள் மீது பொய் வழக்குகளைப் போட்டு சித்ரவதை செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறது காவல்துறை. அப்படியான ஒரு கொடும் சம்பவத்தில் லாக்கப்புக்குள் தள்ளப்பட்ட ராஜாக்கண்ணு, குட்டப்பன், மொசக்குட்டி என்னும் மூன்று இருளர் இளைஞர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியும் அதற்கெதிரான நீதிப் போராட்டமுமே படம். 1995-ல் நடந்த சம்பவத்தை நெஞ்சுக்கு நெருக்கமாக காட்சிப்படுத்தி நெகிழ வைத்திருக்கிறார்கள்

இருளர் பழங்குயினத்தைச் சேர்ந்த ராஜாக்கண்ணு மீது பொய்யான திருட்டு வழக்கை பதிவு செய்யும் காவல்துறை அவரையும், அவரது கர்ப்பிணி மனைவி உள்ளிட்ட உறவினர்களையும் கைது செய்கிறார்கள். விசாரணை என்ற பெயரில் அவர்களை விடிய விடிய அடித்து குற்றுயிரும் கொலையுயிருமாக்குகிறார்கள். சில நாட்களுக்குப் பிறகு விசாரணை கைதியாக இருந்த ராஜாக்கண்ணு உள்ளிட்ட மூன்று பேர் காவல் நிலையத்தில் இருந்து தப்பித்து விட்டதாக போலீஸ் கூற…

தப்பிச் சென்றதாக கூறப்படும் ராஜாக்கண்ணு என்ன ஆனார் என்று தெரியாமல் பரிதவிக்கும் கர்ப்பிணி மனைவி, தனது கணவரை கண்டு பிடிக்க நடத்தும் சட்டப் போராட்டமே படம். அதிகாரத்தின் இருட்டுப் பக்கங்களில் நீதி என்ற தீக்குச்சியை ஏற்றி அதை தீப்பந்தமாய் ஒளிர விட்டிருக்கிற படம் என்ற விதத்தில், சிகரத்தில் ஏற்றி கொண்டாடப்பட வேண்டிய படமாகவும் ஆகியிருக்கிறது.

இந்த சட்டப் போராட்டத்தில் நீதிக்காக போராடும் வழக்கறிஞர் சந்துருவாக வரும் சூர்யாவின் நடிப்பில் சூர்யப் பிரகாசம். வசன உச்சரிப்பிலும், உடல் மொழியிலும் வழக்கறிஞர் சந்துருவாகவே மொத்தப் படத்திலும் வாழ்ந்திருக்கிறார். மனித உரிமை வழக்குகளுக்கு ஒரு பைசா கூட வாங்க மாட்டேன் என்கிற அந்த பிடிவாதம், செங்கேணி சொன்ன ஒரு பொய்க்காக வெளிப்படுத்தும் கோபம், அநீதிக்கு பொதுவெளியிலும் போராடும் அந்த தீர்க்க மனநிலை…போலீஸ் தாக்குதலை இருளர் மக்கள் சொல்லச் செல்ல, கண்கள் கசிந்து இதயம் இறுக்கமாகும் அந்த இடம் என படம் நெடுக ‘சூர்யா…உங்களுக்கு நிகர் யார்யா’ என்று கேட்க வைக்கிறது, நடிப்பு. கோர்ட்டில் வழக்காடும் இடத்தில் எதிர் வக்கீலுக்கு அவர் பதில் கொடுக்கும் ஒவ்வொரு கவுண்டரும் சிக்சர் ரகம்.
இருளர் தம்பதிகள் ராஜாக்கண்ணு-செங்கேணி தம்பதிகளாக மணிகண்டன்-லிஜி மோல் ஜோஸ் நடிப்பில் ஜொலிஜொலிக்கும் அடுத்த இருவர். இருளர் பழங்குடி மக்களின் வாழ்க்கையை நம் கண்முன் நிறுத்துவதோடு, அவர்கள் அனுபவித்த வலிகளையும் தொடக்க முதலே சுலபத்தில் நம்முள் கடத்தி விடுகிறார்கள். மனைவி மீது வெறித்தனமான நேசம் காட்டும் கணவன் மணிகண்டன் ஒருபுறம், அப்புறமாய் செய்யாத திருட்டுக்கு போலீசிடம் அடி உதை வாங்கும் இடத்தில் சோகம் கொப்பளிக்கும் மணிகண்டன் இன்னொரு புறம் என நடிப்பில் பிரித்து மேய்ந்திருக்கிறார்.
போலீஸ் லாக்கப்பில் இருக்கும் கணவருக்கு சாப்பாடு கொண்டு வந்த இடத்தில் கணவருக்கு போலீசால் நடக்கும் வன்முறை கண்டு துடித்துத் துவளும் இடத்தில் லிஜா மோல் நடிப்பில் நம் நெஞ்சம் கலங்கிப் போகிறது. வழக்கை வாபஸ் பெற வைக்க பேரம் பேசும் காவல்துறை தலைவரிடம் உறுதியாக மறுக்கும் இடத்திலும், காவல் துறை ஜீப் முன்பு கம்பீரமாக நடந்து செல்லும் இடத்திலும் …நடிப்பா அது…‘செங்கேணியா நீ வாழ்ந்திருக்க தாயி.’

நீதியின் பக்கம் நிற்கும் விசாரணை அதிகாரி பெருமாள்சாமியாக பிரகாஷ்ராஜ், சினிமாவுக்கு கிடைத்த இன்னொரு அட்சய பாத்திரம். மனிதர் பாத்திரத்தை உள்வாங்கிய திறத்தை ஒரு சோற்றுப்பதமாக சொல்ல வேண்டுமானால், இருளர் மக்களின் சோகத்தை அவர்கள் சொல்லக் கேட்டு உள்ளூர இவர் அதிர்கிற இடம்.

கொடுர காவல் துறை அதிகாரியாக தமிழ், நல்லவேளையாக படம் தியேட்டர்களில் திரையிடப்படாததால் தப்பித்தார். ரசிகர்களுக்கு அத்தனை ஆவேசம் ஏற்படுத்துகிறது இவர் நடிப்பு. (இருந்தாலும் கொஞ்ச நாளைக்கு கொஞ்சம் ஜாக்கிரதையாகவே நடமாடுங்கப்பூ.)

டீச்சரம்மாவாக ரெஜிஷா விஜயன், ஒடுக்கப்பட்ட மக்களை பார்வையாலேயே ஒடுக்கும் ஊர்ப்பெரிய மனிதர் இளவரசு, கெட்ட போலீஸ் குப்பர்குட் சுப்பிரமணி, ‘சிவாய நம’ எம்.எஸ்.பாஸ்கர் இப்படி நடித்த பலரும் தேரந்தெடுத்த நடிப்புப் பொக்கிஷங்கள்.

சிறையிலிருந்து வெளிவந்த கைதிகளை சாதிப்பெயர் கேட்டு காவல்துறை நடத்தும் முதல் அக்கிரமத்திலேயே நம்மை அதிரவைத்து விடுகிறார் இயக்குநர் த.செ.ஞானவேல்.. இருளர்களின் பேச்சு மொழி, சாவுச்சடங்கு, தொழில் என ஒவ்வொன்றையும் காட்சிப்படுத்திய விதத்தில் மனிதர் டிஸ்டங்ஷன் வாங்கி விடுகிறார். ஒரு உண்மைச் சம்பவத்தை நம்பகத் தன்மையுடன் காட்சிப்படுத்திய விதத்தில் இயக்குனராக இவர் வெற்றி, சிகரம் தாண்டிய உச்சம்.

நீதிமன்றம், இருளர் வாழும் பகுதி, காவல்நிலையம் என அத்தனையிலும் கே.கதிரின் கலை அமைப்பு நேர்த்தி.
காவல் நிலைய வன்முறையை காட்டும் இடங்களில் எஸ்.ஆர் கதிரின் கேமரா வரை ரத்தம் தெறிக்கிறது. ஷான்ரோல்டனின் இசையில் பாடல்களை காட்டிலும் பின்னணி இசை முன்னணி வகிக்கிறது.

நெஞ்சுக்குள் ஏறி சிம்மாசனமிட்டுக்கொள்ளும் படங்கள் எப்போதாவது வரும். நீண்ட காலத்துக்குப்பின் இப்போது வந்திருக்கிறது படம் பெயர் ஜெய் பீம்.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2021/11/1d4ba3d7-75f9-461b-85dc-678719080c53-1024x682.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2021/11/1d4ba3d7-75f9-461b-85dc-678719080c53-150x150.jpgrcinemaசினிமா செய்திகள்திரை விமர்சனம்திரைப்படங்கள்இருளர் பழங்குடி மக்கள் மீது பொய் வழக்குகளைப் போட்டு சித்ரவதை செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறது காவல்துறை. அப்படியான ஒரு கொடும் சம்பவத்தில் லாக்கப்புக்குள் தள்ளப்பட்ட ராஜாக்கண்ணு, குட்டப்பன், மொசக்குட்டி என்னும் மூன்று இருளர் இளைஞர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியும் அதற்கெதிரான நீதிப் போராட்டமுமே படம். 1995-ல் நடந்த சம்பவத்தை நெஞ்சுக்கு நெருக்கமாக காட்சிப்படுத்தி நெகிழ வைத்திருக்கிறார்கள் இருளர் பழங்குயினத்தைச் சேர்ந்த ராஜாக்கண்ணு மீது பொய்யான திருட்டு வழக்கை பதிவு செய்யும் காவல்துறை...