உடல்கள் இணைவதல்ல; உள்ளங்கள் இணைவதே தாம்பத்யம்! -கருத்து சொல்லும் படமாக ‘பூம் பூம் காளை.’

கெவின் – சாரா ஜோடிக்கு திருமணமாகி, தேனிலவுக்குப் போகிறார்கள். கெவின் ‘அந்த’ சம்பவத்துக்காக பறக்கிறார். சாராவோ, நமக்குள் பேசிப் புரிந்துகொண்டு, காதலாகி கசிந்துருகி பிறகு சங்கமிக்கலாம் என பதுங்குகிறார்.

காமத்தைக் கட்டுப்படுத்த முடியாத கெவின் போதையேற்றிக் கொண்டு வந்து சாரா மீது ‘காளை’யாகப் பாய்கிறார். அப்படியும் சம்பவம் சாத்தியமாகவில்லை. தம்பதிக்குள் விரிசல் விழுகிறது. அதிலிருந்து அவர்கள் மீண்டார்களா? தாம்பத்யம் அரங்கேறியதா? என்பதே ‘பூம் பூம் காளை’யின் ரசிக்கத்தக்க எபிசோடுகள்! இயக்கம்: குஷால் குமார்

 

‘அந்த’ விஷயத்துக்கு ஏங்குவதாகட்டும், பழகியவன் பேச்சைக் கேட்டு குடித்துவிட்டு போய் மனைவியிடம் வீர வசனம் பேசுவதாகட்டும், மெல்லிய ஈகோவுக்குள் விழுந்து கெத்து காட்டுவதாகட்டும் கெவினின் அமைதியான, அழகான நடிப்பு கவர்கிறது. இவர் அந்தக் கால (கவர்ச்சி) நடிகை அனுராதாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்க செய்தி. அனுராதாவின் மகள் அபிநயஸ்ரீ இந்த படத்தில் காவல்துறை உயரதிகாரியாக நடித்திருக்கிறார் என்பதும் அவரது நடிப்புப் பங்களிப்பு கச்சிதம் என்பதும் கூடுதல் தகவல்!

நாயகி சாரா இளமையாக இருக்கிறார். அலட்டிக் கொள்ளாமல் நடிக்கிறார். சப்ஜெக்ட் அப்படி இப்படி இருந்தாலும் நாயகி சாராவை அப்படி இப்படி காட்டாமல் விட்டிருப்பது தனித்துவம். பரிகாரமாக ரிஷாவின் ஜில்லாட்டம் ஒன்றை வைத்து சூடேற்றியிருக்கிறார்கள்.

படத்தில் அப்புக்குட்டிக்காக கசமுசா சங்கதிகளை மையப்படுத்தி காட்சிகள் வருகிறது. அவை கொஞ்சமே கொஞ்சம் ரசிக்கும்படியிருக்கிறது. ‘காதல்’ படத்தில் சுகுமாருக்கு வாங்கிவரும் டீயில் வில்லங்கம் செய்கிற அந்த குட்டிப் பையன் இதில் இளைஞனாக வருகிறார். கிட்டத்தட்ட அந்த படத்தில் செய்ததையே செய்கிறார்.

இயக்குநர் ஆர். சுந்தராஜன் – சச்சு ஜோடி காதல், பாசம், நேசம், தாம்பத்யம் என்பதற்கெல்லாம் விளக்கம் கொடுத்து தத்துவ மழை பொழிகிறார்கள். அதில் இன்றைய இளைய தலைமுறைக்கு தேவையான அட்வைஸ் இருக்கிறது!

கதைக்கு அத்தனை ஒட்டவில்லையென்றாலும் அமைச்சரின் அடாவடி அது இது என வருகிற காட்சிகளில் விறுவிறுப்பு இருக்கவே செய்கிறது!

கதைக்குப் பொருத்தமான ஞானகரவேலின் பாடல் வரிகளுக்கு தனது இசைமூலம் இனிமை கூட்டியிருக்கிறபி.ஆர். ஸ்ரீகாந்த்.

‘அந்த’ளவுக்கு எதுவும் இல்லாத படத்துக்கு சென்ஸார் ‘ஏ’ சான்றிதழ் கொடுத்திருப்பது ஏனோ?

பூம்பூம் காளை இளம் காளைகளுக்கு விருந்து!